Saturday, May 20, 2017

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

இகுதொப்ப யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல், உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது கடினம். ஆனால், அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தோ அல்லது சிறிது மோரை சேர்த்தோ அந்த உப்பை சரி செய்வது போல, ஒரு மனிதன், கர்ப்ப கோடி காலம்  எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும், அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக, புதிதாக பாவம் செய்யாமலும், அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும், சிறிது நீரையோ, மோரையோ சேர்ப்பதுபோல, புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டு வந்தால், அகுதொப்ப அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல, அந்த பாவத்தினால் வரக்கூடிய விளைவுகள் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால், உப்பின் தன்மை தெரியாதது போல, சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக, அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக, பாவத்தின் தாக்கம், அவன் தாங்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. அவ்வளவே. இந்த கருத்தை மனதில் கொண்டு, எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும், (அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்படவேண்டாமா என்று வினவ வேண்டாம்) யாராக இருந்தாலும், அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கை என்றும் உயர்வாக, இனிமையாக, திருப்தியாக, சந்தோஷமாக, சாந்தியாக இருக்கும்.

எல்லா வகையான பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் ஒரு மனிதனின் விதிதான் காரணம். அதே சமயம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்,அவன் உயர்விற்கும், அவன் சுகத்திற்கும், அவன் வெற்றிக்கும், அவன் நிம்மதிக்கும் அதே விதிதான் காரணம். ஒரு மனிதன் வங்கியிலே சிறிது, சிறிதாக தனத்தை போட்டுக்கொண்டே வந்திருந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிறிய தொகை, பெரிய தொகையாக வளர்ந்து அவனுக்கு திருப்பித் தரப்படுகிறது. அதைப் பெறுகின்ற மனிதன் சந்தோஷம் அடைவான். அதே வங்கியில் கடனைப் பெற்ற மனிதன் அதே வங்கியிலிருந்து தனத்தைப் பெறுவதற்கு பதிலாக ஏற்கனவே வாங்கிய கடனுக்காக சிறிது, சிறிதாக இவன் அடைத்துக்கொண்டே வரவேண்டும். எப்படி அடைக்க வேண்டும் ? எத்தனை காலம் அடைக்க வேண்டும்? என்றால் இவன் வாங்கிய தொகை, அதற்குண்டான வட்டி விகிதம், இவன் எத்தனை விதமான பாணியில் திருப்பித் தருவதற்குண்டான ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை பொறுத்து இருக்கிறது. ஆனால் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் செலுத்திவிட்டு ‘ நான் கடினப்பட்டு பெறுகின்ற தொகையாவையும் வங்கியே பிடுங்கிக் கொள்கிறது. இதிலிருந்து எனக்கு விடுதலை கிடையாதா?" என்றால், வங்கியில் உள்ள மனிதர்கள் என்ன கூறுவார்கள்?. ‘அப்பனே! நீ பெற்ற தொகை இந்த அளவு.  அதற்குண்டான வட்டி விகிதம் இந்தளவு. இதுவரை செலுத்தியது இந்தளவு. இனி செலுத்த வேண்டியது இந்தளவு‘ என்று கூறுவார்களே, அதைப்போல, ஒரு மனிதன் பாவத்திற்குண்டான சூழலை நுகர, நுகர அந்த பாவம் குறைந்து கொண்டே வருகிறது. இரண்டையும் நாங்கள் அனுபவம் என்றுதான் பார்க்கிறோம். மனிதன் வேண்டுமானால் சுகம் என்றும், துக்கம் என்றும், தண்டனை என்றும் பார்க்கலாம். பாவங்களால் ஒரு மனிதன் நுகரும் அந்த நிகழ்வுகளை ஒரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். புண்ணியத்தால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய சந்தோஷமான அனைத்து நிகழ்வுகளையும் வேறொரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். இரண்டுமே ஒரு மனிதனால் நுகரப்பட்டு, நுகரப்பட்டு ஒரு நிலையில் சீர்நிலைக்கு வந்துவிடும். எனவே ஒரு மனிதன் உடலிலே நோய் வந்தாலும், ஒரு மனிதனால் இயல்பாக சிந்திக்க முடியாமல் தவறான சிந்தனையிலே தன்னை ஆழ்த்திக்கொண்டு தவறான பாதையில் சென்றாலும், அல்லது தோல்வி மேல் தோல்வி வந்தாலும் அல்லது வெற்றி மேல் வெற்றி வந்தாலும் அவையனைத்தும் அவன் என்றோ, எத்தனையோ பிறவிகளில் சேர்த்த பாவ, புண்ணியங்களின் எதிரொலிதான்.

ஆசிகள்!

நதியின் சங்கமம் ஆழியோடு.
உயர் நற்றமிழின் சங்கமம் நற்சுவையோடு.
விதித்த விதியின் சங்கமம் அவனவன் செயலோடு.
என்றென்றும் பதியின் சங்கமம் மெய் பத்தினியோடு.
அவனவன் மதியின் சங்கமம் உயர் குணத்தோடு.
விளைந்த கதியின் சங்கமம் அவனவன் எண்ணத்தோடு.
என்றென்றும் தர்மத்தின் சங்கமம் புண்ணியத்தோடு.
தளர்வில்லா மனதின் சங்கமம் இறையோடு.
தப்பில்லா வாழ்வும் வளமோடு இருக்க
நாள் நாளும் நிகழும் சங்கமம் நல்வினையோடு
நலமில்லா சூழலின் சங்கமம் முன் கர்மத்தோடு
நன்றாய் உயிரின் சங்கமம் ஆக்கையோடு
அந்த ஆக்கையின் சங்கமம் ஆண், பெண் கலப்போடு
அறியுங்கால் அடியாரின் சங்கமம் உயர் தொண்டோடு
உயர் தொண்டின் சங்கமம் நல் புண்ணியத்தோடு
ஆன்மா,ஆக்கை எடுத்த பயன், புலன் ஆசை விட்டு, அன்றாடம், அறம், சத்தியம் தொடர்ந்து
மெய் ஞான வழியில் சென்று, ஆக்கை தாண்டி ஆன்மாவை இறையோடு சங்கமித்தாலே.
சங்கமிக்கும் காலம் வரை தேகம் மீண்டும், மீண்டும் சங்கமிக்கும்.
தமிழ் சங்கமம் வளர்த்த அன்னை மீனாள், பெருகூர் தன்னில் இருந்து,
சங்கத்தோடு சில சந்தேகத்தோடு எம்முன் அமர்ந்த, என்றும் எம்மையே சங்கமித்து,
எம்மையே சங்கல்பம் செய்து, சங்கில் இருந்து நாதம் வந்தாலும்,
எம் நாதமாக எண்ணி, எம்மையே சங்கநாதம் செய்யும் பூர்வ ஜென்ம தொடர்...........

நல்லாசி!

via சித்தன்அருள்

Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya

No comments:

Post a Comment