Thursday, June 8, 2017

அகத்தியப்பெருமானின் இன்றைய அருள்வாக்கு


இறைவன் அருளாலே மாயையை வெல்ல வேண்டும் என்று புறப்பட்ட மனிதன் வென்றதாகத் தெரியவில்லை. இன்னும் கூறப்போனால் "இது மாயை, இது மாயை இல்லை" என்று ஒரு மனிதன் எண்ணும்பொழுதே அவன் மாயைக்குள் சிக்கி விடுகிறான். ஒரு மனிதனின் தாயைப் போல் அவனுடன் இரண்டற கலந்திருப்பதே மாயைதான். அறியாமையின் உச்சம், பாசத்தின் உச்சம், ஆசையின் உச்சம், எதிர்பார்ப்பின் உச்சம், தேவைகளின் உச்சம் – இப்படி மனித எண்ணங்களில் எவையெல்லாம் மகிழ்ச்சி என்று அவன் இதுவரை எண்ணிக்கொண்டு வாழ்கிறானோ அவற்றின் அத்தனை கூறுகளையும் பார்த்தால் அது மாயையின் விழுதுகளாகவே இருக்கும். பின் எப்படித்தான் வாழ்வது? வாழ்க்கையை எதிர்கொள்வது? என்றால் உடலால் வாழ்வது ஒரு வாழ்வு. சிந்தனையால் வாழ்வது ஒரு வாழ்வு. வெறும் உடலால் வாழ்வது மிருக வாழ்வு. அதனையும் தாண்டி சிந்தனையால் வாழ்வதும் அந்த சிந்தனையும் அற சிந்தனையாக இருப்பதுமே இறை நோக்கி செல்வதற்குண்டான படிகளாகும். எல்லாவற்றையும் ஒரு உன்னத ஞானியின் பார்வையிலே பார்க்கப் பழகுவதும் எது நிலைத்ததோ, எது நிலைக்குமோ, எது நிலைத்த தன்மையை தருமோ, எது தீய பின் விளைவுகளைத் தராத ஒரு நிலையோ, அஃது எஃது? அதை எப்படி உணர்வது? அதற்காக யாது செய்வது? என்று சதா சர்வ காலம் சிந்தித்து வாழ்வதே அற சிந்தனையாகும்.

இயல்பாகவே ஒருவனிடம் ஏராளமான ஆஸ்தி இருப்பதாக்க கொள்வோம். அஃது அன்னவனுக்கு பெரிதாகத் தோன்றாது. இருக்கின்ற ஆஸ்தியெல்லாம் சிக்கலில் மாட்டி, தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற சூழல் வந்து அந்த அபாயத்தை அவன் தாண்டி, மீண்டும் அவன் எண்ணுகின்ற அந்த பெருஞ்செல்வம் அவன் கையிலே கிட்டினால், அது அவனுக்கு பெரிதாகவே தோன்றுகிறது அல்லது இயல்பாகவே தேகம் நன்றாக இருக்கும்பொழுது யாதொன்றும் தோன்றுவதில்லை மாந்தனுக்கு. ஒரு சிறு குறை ஏற்பட்டு அந்தக் குறை என்று அகலும் என்று எண்ணி, எண்ணி, ஏங்கி குறை அகன்றவுடன் சற்றே நிம்மதி கொள்கிறான். இறைவன் அருளாலே கூறுங்கால் அவன் கையில் இருக்கும் தனம் கையிலே இருந்தால் பெரிதாகத் தோன்றுவதில்லை. கையிலே இருக்கும் தனம் தொலைந்து கிட்டினால், பெரிதாகத் தோன்றுகிறது. இந்த மனித இயல்பும் மாயைக்கு உட்பட்டதே. எனவேதான் மாயை குறித்து எம்போன்ற மகான்களும், ஞானிகளும் அவ்வப்பொழுது மாந்தர் குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறோம்.

பொதுவாகவே, வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ, குற்றமோ கூறவில்லை. அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஒலையை நம்பி, நாடி, இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும்பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 – க்கு 100 பின்பற்றி, அதன் வழியாக நடக்க, நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார், இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால், அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட, இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் "சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படித் தோன்றவில்லையே?" என்று ஒருவன் கூறுவான். எனவேதான், சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

via சித்தனருள்
Sithanarul

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

No comments:

Post a Comment