Thursday, July 13, 2017

உடம்பினுள் உத்தமனைக் காண்



#உடம்பினுள் உத்தமனைக் காண் 

சித்தர்கள் The Ascended Masters

அரிதான பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றவர் மகான் / சித்தர் / சிவம் / கடவுள் ஆகவேண்டும்.

"உடம்பினுள்
உத்தமனைக் காண்" 

- ஆசான் ஔவையார்

"உடம்புளே உத்தமன்
கோயில் கொண்டான்"

-ஆசான் திருமூலர்.

பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி, கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

"உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு
வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே"

- ஆசான் #திருமூலர்
(திருமந்திரம்)

"உடம்பனை முன்னம்
இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே
யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன்
கோயில்கொண் டான் என்
உடம்பினை யானிருந்
தோம்புகின் றேனே."

-திருமந்திரம்

ஞானிகள் காரண உடம்பை பெற்றவர்கள். நமது உடம்பு தூல தேகம் கண்ணால் பார்க்க கூடியது ஆனால் சூட்சுமதேகம் என்றால் அறிவுக்கு மட்டுமே புலப்படும். உடம்பைப் காப்பாற்றிக் கொண்டவனால்தான் பிறவியை ஒழிக்க முடியும். சைவ உணவை உட்கொண்டு தினம் தினம் தியானம் செய்ய வேண்டும்.

நம் உடம்புக்குள்ளே மிக அற்புதசக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான் சுப்ரமண்யர் அருளாசி வேண்டும்.. அவர் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஓர் ஒளிச்சுடர், சொல்லவொண்ணாப் பேரானந்தத்தை தரக்கூடிய ஒர் ஒளிச்சுடரை அவர் அடைந்திருக்கிறார். அதை நாம் அடைய வேண்டும்.

அதை அடைவதற்குக் கடைசி, குறையெல்லாம் நிவர்த்திப்பதற்கு நிறை எது ? என்று கேட்டான். அது மீண்டும் பிறவாமை. அதுதான் நிறை. குறையெல்லாம் முடிந்தது. முன் செய்த பாவம் குறை. கல்வி குறை; மன உளைச்சல்; பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து கொண்டே வருகிறது. தீரும் வரை விடக்கூடாது. அதுதான் பிரச்சனை, நம் குறை தீர்ந்தது; செல்வநிலை பெருகியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் தீர வேண்டும். கடைசியில் பெற வேண்டிய ஒன்று. நிறைவான வாழ்வு. எப்போதும் நிறைவான வாழ்வு. அதை அடைவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும். அதுதான் முடிவு. பூஜையின் முடிவு அதுதான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இப்ப ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் திருவடியைப் பற்ற வேண்டும். அதுதான் குறையது கூறி குணங்கொண்டு போற்ற என்றார்.

நம் குறையெல்லாம் சொல்லி, குணங்கொண்டு போற்றணும். போற்றுதல் என்பது ஞானிகளைப் புகழ்ந்து பேசுதல். நல்ல பண்போடு குணங்கொண்டு பேசணும்.

"குணங்கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டி"

நம் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது இப்போது. எந்தச் சிறையில் கிடக்கிறது? மனமாசு. மலமாசு. உடம்பு என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தில் அந்த ஆன்மா சிறைப்பட்டிருக்கிறது. சிறை உடல் நீ அறக் காட்டி – ஆன்மா சிறைப்பட்டிருப்பதை, நீக்கக் காட்டி, அது அற்றுப் போகும்படி செய்து,

"சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே" நாம் சிவத்தோடு சேர வேண்டும். இப்போது நாம் சவமாக இருக்கிறோம். நம் உடம்பில் தலைவன் இருந்தாலும், புலப்படவில்லை நமக்கு. அதுதான்,

உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே

-திருமந்திரம்-கவி எண் 431

நம்மோடு தலைவன் இருக்கிறான். ஆனால் அவனை அறிய முடியாது. ஆக நாம் என்ன செய்யணும், சிவத்தோடு இருக்கணும். நம் உடம்பிற்குள்ளேயே தலைவன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான்

"உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை"


அவன் நம் மனதை விட்டு ஒரு அடி கூட, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஒரு ஜாண் கூடப் போகவில்லை. உள்ளம் விட்டு ஓரடி என்று சொன்னார்.

"உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே."


அவனும் நாமும் இருக்கிறோம். ஆனால், நாம் உடம்பாகிய சாக்கடைக்குள்ளே ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணி ஜொலிக்க வேண்டும். அதுவோ ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் உள்ள ஒரு வைரமணி. அந்த வைரஜோதி, அதுதான் அந்த ஆணிப்பொன் அம்பலம் என்று சொல்வார். அந்த மணி வந்து உடம்பாகிய நாற்ற தேகம், அசுத்தத்தில் கிடக்கிறது. அப்ப என்ன சொல்வார், சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே என்றார். சுடரைத் தட்டி எழுப்பணும்.



தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

*திருமூலர்*


*பொருள்*

தேனை உண்ணும் போது வரும் இன்பத்திற்கு கருப்பு சிவப்பு என்று உருவம் கொடுக்க முடியுமா அதுபோல் பேரின்ப மயமான இறைவனுக்கு உருவம் கொடுக்கமுடியாது. சொருபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறியாமை என்கிறார். தேனுக்குள் சுவை இன்பம் இருப்பதுபோல் நம் உடம்புக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்கிறார் திருமூலர்.


ஆசான் ஔவையார் அருளிய
ஞானக்குறள் <உடம்பின் பயன்>

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண். 11

உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார். 12

ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். 13

பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14

உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம். 15

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 16

ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. 17

உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18

உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. 19

அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். 20


ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment