Wednesday, July 5, 2017

அகப்பேய்..!

தன்னை ஆராய்..! தன்னை அறி..! தன்னை வெல்..!
சித்தர்கள் The Ascended Masters
புறத்தில் பேய்கள் இருக்கோ இல்லையோ நாமறியோம். ஆனால், நம் அகத்தில் நிறையப் பேய்கள் உண்டு. நாம் எவ்வளவுதான் நல்லவர்போல் நடித்தாலும் சுயநலப் பேய், கோபப் பேய், காமப் பேய், ஆணவப் பேய் என எல்லாப் பேய்களும் தலைவிரித்து ஆடிய வண்ணமே இருக்கும்.  இவை யாராலும் வெல்ல முடியாத அகக் குணக்கேடுகள்
.
இப்படியாக நம்மை வஞ்சிக்கும் அகப்பேய்களை விரட்டி, ஐம்புலன்களையும் அடக்கி, தன்னைத்தானே வென்ற வீரர்களே சித்தர்கள்.

"தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!"
- அகப்பேய்ச்சித்தர்

கருத்துரை:
தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறை இருக்கின்றது. தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.

அகப்பேய்ச்சித்தர் பதினெண் தமிழ்ச்சித்தர்களில் ஒருவர். இவரது வரலாறோ அன்றிக் காலமோ இதுவரை துணியப்படவில்லை. அகப்பேய்ச் சித்தர் பாடல் எனும் பாடற் தொகுப்பு நூல் "அகப்பேய்" எனும் விளியுடன் தொண்ணூறு பாடல்களுடன் அமைந்துள்ளது.

"தன்னை அறியும்" உயர்நிலை..!

"யான் பெற்ற இன்பம் 
பெறுக இவ்வையகம்"


சிவத்துடன் இரண்டறக் கலந்த "முற்றுப்பெற்ற குரு" சிவமாகிறார். சீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலப்பதென்பது ஒரு குடம் தண்ணீர் சமுத்திரத்துடன் கலப்பதற்கு ஒப்பானது. ஒரு குடம் தண்ணீர் சமுத்திர நீருடன் கலக்கும்போது, குடத்தண்ணீர் தன் இயல்பை இழந்து சமுத்திர நீராகிவிடும். அவ்வாறு இரண்டறக் கலந்த "முற்றுப்பெற்ற குரு" தெய்வத்துடன் இரண்டறக் கலப்பதால் தெய்வநிலை எய்துகிறார்; தெய்வமாகிறார்.

"குருவே சிவமெனக்
கூறினன் நந்தி
குருவே சிவமென்பது
குறித் தோரார்
குருவே சிவனுமாய்க்
கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர்
வற்றதோர் கோவே."

- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஆனால் இன்றோ போலிக் குருக்களே அதிகம். அதையும் ஆசான் திருமூலர் எச்சரிக்கிறார்.

"குருட்டினை நீக்கும்
குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக்
குருவினைக் கொள்வர்
குருடும் குருடும்
குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும்
குழிவிழு மாறே."

- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

காவி அணிந்தவரும், கற்றை முடி தரித்திருப்பவரும் மட்டுமே குருவாகி விடுவதில்லை. சிறந்த குருவைக் கண்டடைய முதலில் நாம் நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறான நிலையடையும் போது மெஞ்ஞானச் சற்குரு உதவியுடன், ஞானத்தலைவன் முருகப்பெருமானே வாசி நடத்தித்தர இறையாகிய சிவத்துடன் இரண்டறக் கலக்கலாம். நாமே சிவம் என்ற "தன்னை அறியும்" உயர்நிலையை அடையலாம்.

"தன்னை அறியத்
தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமற்
தானே கெடுகிறான்
தன்னை அறியும்
அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்கத்
தானிருந்தானே!"

- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஆசான் திருமூலர் அரிய பிறப்பாகிய மனிதர் நாம், நம் "தன்னை அறியும்" உயர்நிலையை குரு முகாந்திரமாக அடையலாமெனத் தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகோரும் பெற வேண்டும் என்ற தூய எண்ணத்தால் நமக்குப் பாடலாக அருளியுள்ளார். நாமும் ஆசான் திருமூலரின் திருமந்திரப் பாடல்களைப் படித்து, உணர்ந்து, தக்க குரு முகாந்திரமாக ஆசான் திருமூலர் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறுவோமாக.

"யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற
மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற
உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத்
தலைப்படும் தானே"

- திருமந்திரம் (ஆசான் #திருமூலர்)

ஓம் திருமூலப் பெருமான் திருவடிகள் சரணம்.

நன்றி! ❤️
04/07/2015
Nàthàn கண்ணன் Suryà


❤️ Aum Muruga ஓம் மு௫கா ❤️

சித்தர் அறிவியல் Wisdom of Siththars

No comments:

Post a Comment