Thursday, February 1, 2018

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு



"புற விடயங்கள் என்னை பாதிக்கின்றன. நான் விரும்புகின்ற மெய்ஞானத்தை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன" என்று மனிதர்கள் எண்ணுவது ஒரு வகையில் நியாயம்தான் என்றாலும் இந்த நிலையையும் ஒரு மனிதன் தாண்டி செல்ல வேண்டும். புற விடயங்களோ, வேறு விடயங்களோ ஒரு மனிதனின் மெய்யான மெய்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது அல்லது அந்த நோக்கத்தை தடை செய்கிறது என்றாலே அந்த மனிதன் இன்னும் நன்றாக, உறுதியாக, உறுதியாக, உறுதியாக மெய்ஞானத்தை பற்றவில்லை. அதை நோக்கி செல்லவில்லை என்பதே மெய்யாகும்.

எனவே ஒரு உறுதியான உறுதிப்பாடு ஒரு மனிதனின் ஆத்ம நிலை குறித்தும் உடல் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை எதற்கு? இந்த ஏணி எதற்கு? இந்தத் தோணி எதற்கு? இந்த வாகனம் எதற்கு? வாகனத்திலேயே வாழப்போகிறோமா? அல்லது நதியை கடக்க மட்டுமே இந்தத் தோணியா? என்பதைப் புரிந்து கொண்டு நதியைக் கடக்கும் வரை தோணியின் முக்கியத்துவம். ஊரை சென்றடையும் வரை வாகனத்தின் முக்கியத்துவம். அஃதொப்ப லிகிதம் பத்திரமாக சென்று யாரிடம் சேரவேண்டுமோ, சேரும் வரை உறையின் முக்கியத்துவம், இந்த அளவிலே உடல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம். எனவே அதற்காக உடலைப் பேணுதல் அவசியம் என்றாலும் உடல் உணர்ந்து கொடுக்கும் உணர்வுகளுக்குள் உள்ளம் விழுந்துவிடக்கூடாது.

அங்கே ஆத்மாவின் சொல்படி உடல் கேட்டால் அது மாயையை வெல்ல நல்லதொரு பயணமாக இருக்கும். உடலின் இச்சைக்கு ஏற்ப ஆத்மா செல்ல துணிந்தால் அங்கே மாயை எனும் கடலுக்குள் அந்த ஆத்மா முழுகிக்கொண்டே இருக்கிறது என்பது பொருளாகும். ஒவ்வொரு தினமும் ஒரு மனித வாழ்விலே மனித நோக்கத்திலே உலகியல் வெற்றியை எந்த அளவு குவித்திருக்கிறோம் என்று எண்ணும். ஆனால் அது ஒரு நிலை என்றாலும் அதுவே ஒரு உன்னத நிலை அல்ல என்பதை மெய்யான மெய்ஞான வழியிலே வருகின்ற ஆத்மாக்கள் உணர வேண்டும்.

ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு கணமும் பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதும் முன்னரே சேர்த்த பாவங்களை தொலைப்பதுமே ஒரு மெய்யான வாழ்வாக இருக்க வேண்டும் ஒரு மெய்யான மெய் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு. எனவே வாதங்கள், விசாரங்கள், தத்துவ விளக்கங்கள், நிறைய நூல் ஓதுதல் என்றெல்லாம் ஒரு மனிதனை ஆன்மீகப் பாதைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

இருந்தாலும் இது போன்ற நூல்களை வாசிப்பதும், வாசித்ததை மனதிலே வைத்து யோசிப்பதும், யோசித்த பிறகு இறையை நோக்கி எதை யாசிக்க வேண்டும் ? என்பதை உணர்வதும் பிறகு எப்படி பூசிக்க வேண்டும் ? என்பதையும் மனிதன் மெல்ல, மெல்ல காய்த்தல், உவத்தலின்றி நடுநிலையில் நின்று புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

-சித்தன் சிவமயம்
SiththanArul
https://www.facebook.com/groups/siddhar.science



No comments:

Post a Comment